மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்காக எதிர்வரும் யூன் மாதம் 18ஆம் மற்றும் 20ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபகர்ளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று(30-04-2025)ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணையானது நடைபெற்றது.
இதன்போது திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இந்த நிலையில் ஊடகவியலாளரை இரண்டு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் யூன் மாதம் 18ம் திகதி மற்றும் 20ம் திகதிக்கு விசாரணைக்காக ஒத்திவைத்தார்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது வழக்கில் தொடர்புடைய அனைவரும் மன்றுக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.