கிழக்கில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத 30 உள்ளூராட்சி சபைகளுக்கான தவிசாளர், துணை தவிசாளர்களை தெரிவு ஜூன் 15 க்குப் பின்னரே சாத்தியம்|கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தெரிவிப்பு.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் எந்த தரப்பும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாத 30 உள்ளூராட்சி சபைகளுக்கான தவிசாளர் மற்றும் துணை தவிசாளர்களை தேர்வு செய்வதற்கான முதலாவது சபை அமர்வுகள் பெரும்பாலும் ஜூன் 15ஆம் தேதிக்குப் பின்பு தான் நடைபெறுமென கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ எல் எம் அஸ்மி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் தேர்வு குறித்த முதலாவது சபை அமர்வு தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி சபைகள் உள்ளன இவற்றில் கல்முனை மாநகர சபையை தவிர்த்து ஏனைய 44 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தேர்வான உறுப்பினர்களுக்கான உறுப்புரிமை வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இம்மாதம் அதாவது ஜூன் மாதம் 02 ந் திகதி முதல் செயற்படும் வண்ணம் நடைமுறைக்கு வருகின்றது. இதற்கு அமைய 50 வீதத்துக்கு அதிகமாக உறுப்பினர்களை பெற்றுள்ள 14 உள்ளூராட்சி மன்றங்களினது மேயர் அல்லது தவிசாளர் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளருடன் இணைந்து நான்கு நாட்கள் முன்னதாக அவகாசம் வைத்து உறுப்பினர்களுக்கு அறிவித்தல் கொடுத்து சுயமாக தத்தமது உள்ளூராட்சி மன்றங்களின் சபை அமர்வுகளை ஆரம்பிக்கலாம்.
அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நான்கு நாட்கள் அவகாசத்துடன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து ஜூன் 02 ந் திகதி சபை அமர்வுகளை நடத்துவதற்கு தேவையான கால அவகாசம் இன்மையால் ஜூன் 02 ந் திகதி இவ்வாறு 50 விகிதத்திற்கும் அதிகமான பெரும்பான்மையைக் கொண்டுள்ள சபைகளின் முதலாவது அமர்வுகள் இடம் பெறுவது சாத்தியமற்றது.
அதே வேளை கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாது கொங்கு நிலையில் 30 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளும் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 09 உள்ளூராட்சி சபைகளும் பெரும்பான்மை பலம் இன்றி இவ்விதம் தொங்கு நிலையில் உள்ளன. இச்சபைகளின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவி பிரிவுக்கான தெரிவுகளானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்ற வகையில் எனது தலைமையில் அந்தந்த சபைகளில் இடம் பெறும்.
இக்கூட்டங்கள் பெரும்பாலும் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்கு பிற்பாடே அந்தந்த சபைகளில் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன.ஏனெனில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ளாத 30 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தவிசாளர் மற்றும் துணை தவிசாளர்களை தேர்வு செய்வதற்கான முதலாவது சபை கூட்டம் அமர்வு நடைபெறும் திகதிகள் குறிப்பிட்டு மும்மொழிகளிலும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படல் வேண்டும்.
அதன் படி முதலாவது அமர்வு நடைபெறும் தினத்திற்கு 07 நாட்களுக்கு முன்னதாக இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ளாத முப்பது உள்ளூராட்சி மன்றங்களுக்குமான முதலாவது அமர்வு ஜூன் மாதம் 15 ந் திகதிக்கு பிற்பாடே இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தெரிவித்தார்.
அத்துடன் குறைந்தது இந்த 30 உள்ளூராட்சி சபைகளுக்கும் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர்களை தேர்வு செய்வதற்காக 15 நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.