மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள துறைநீலாவணை மகாவித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட புதிய அதிபர் சாமித்தம்பி-கிருபைராஜா தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை(16.6.2025)ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள 1AB பாடசாலையும்,கிராமத்தில் அதிகளவான புத்திஜீவிகளையும்,கல்விமான்களையும் உருவாக்கிய பாடசாலையுமான துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் இன்றைய தினம் புதிய அதிபராக துறைநீலாவணையைச் சேர்ந்த சா.கிருபைராஜா கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய அதிபராக கடமையேற்கும் இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்(கல்வி அபிவிருத்தி) புருச்சோத்மன் திவிதரன்,இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் கே.திருச்செல்வம்,பிரதியதிபர் இ.லிங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
இங்கு கடமையாற்றிய முன்னாள் அதிபர் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு மீள இணைக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை அதிபர்சேவை தரம்-1ஐ(SLPS-1) சேர்ந்த அதிபர் ஆவார்.இவர் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியும்,நாவிதன்வெளி 15 ஆம் கொலனி விவேகானந்தா மகாவித்தியாலயம்,இலுப்பைகுளம் சரஸ்வதி வித்தியாலயம்,துறைநீலாவணை மெ.மி.த.க பாடசாலை,துறைநீலாவணை மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் பிரதியதிபராகவும்,அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
துறைநீலாவணை ஸ்ரீ தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் தலைவராக இருந்து சமயப்பணி மற்றும் கல்விப்பணியை முன்னெடுத்ததோடு இவர் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருக்கின்றார்.இவருக்கு துறைநீலாவணை பொதுமக்கள்,நலன் விரும்பிகள் பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு துறைநீலாவணையில் கல்வியில் இன்னும் உயர்ச்சிகாணுவதற்கு புதிய அதிபர் அயராது உழைக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றார்கள்.