மட்டக்களப்பு துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தில் - திருக்கல்யாணச் சடங்கு!



மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கில் நேற்று (15-06-2025) ஆம் திகதி 
திருக்கல்யாணச் சடங்கு மிகவும் பக்கிபூர்வமாக இடம் பெற்றன.

கல்யாண கால் வெட்டு நேற்று(15-06-2025)
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெறும். இத் தினத்தில்  இருந்தே தான் கோயிலின்  விஷேட நிகழ்வுகளும்  பக்தர்களின் அதிகரிப்பும் காணப்படும். ஊர் முழுவதும் திருவிழா கோலம் கொள்ளும். கல்யாண கால் வெட்ட செல்லும் போது  ஊரின் நடுவீதியால்  மட்டும் அம்மனை பல்லக்கில் வைத்து அடியார்கள் தோளில் சுமந்து செல்வர். மஞ்சள் குளித்து தேவாதிகள்  ஆடி வருதல் ஒரு சிறப்பம்சமாக விளங்கும்.

உருவேற்றப்பட்ட சிலம்புகள் வைக்கப்பட்ட பெட்டியும் அம்மனது பல்லக்கும் பெருந்திரளான மக்களும் சூழ்ந்து செல்லும் காட்சியானது கண் கொள்ளா காட்சியாகும். இன்றைய தினத்தில் சிலம்புகளே பூசையில்  முக்கிய இடம்வகிக்கும்.கிரியைக்குட்படுத்திய சிலம்புகள் வைக்கப்படும் பெட்டியிலிருந்து சிலம்புகள் குதிகொண்டெழும்.இப் பெட்டியை  தலையில் சுமந்து வரும் பக்தனும் அடிக்கடி சுய நினைவை  இழப்பார். இவரது சுயநினைவு மாறாமலும்  குதிகொண்டெழும்   சிலம்புகள் வெளியில் வராத வாறும் பாதுகாப்பதே  பூசகர்கள் முக்கிய பணியாக கொள்வர். காப்புக்கட்டி விரதம்  நோற்று இருக்கும் பக்தரே இச் சிலம்பு பெட்டியை தலைமீது வைத்து சுமந்து கொண்டு வருவார்.





ஸ்ரீ தில்லையம்பலப் பிள்ளையார்  ஆலய விசேட பூசையின்  பின்னர் சிலம்புகளின் சீற்றமும்  குறைந்து செல்லும்.கல்யாணக்கால் வெட்டும் இடத்தில் உள்ள பூவரச மர கிளைக்கு கிரியைகள் ஆற்றிய பின்னர் அது வெட்டப்பட்டு மீளவும்  கிரியைக்கு உட்படுத்தப்பட்டு பூசகரும்  அவரது சகாக்களும் தோளில் வைத்து அதனை கோயிலுக்கு எடுத்துச் செல்வர். கல்யாண காலை  வெட்டியதும் வெட்டிய  பூசகர் உணர்வை  இழப்பார்.அவ் வேளையில்  பூசை  விதிமுறை தெரிந்த ஒருவரால்  அவர் சுய நிலைக்கு மீட்கப் பெறுவார்.

கோயிலைச் சென்றடைந்த  கல்யாண கால் அம்மனின் கல்யாண மண்டபத்தினுள் நிறுத்தப்படும். பின்னர் உரியவாறு அலங்கரிக்கப் பெற்ற பந்தலிலுள்  அம்மன் கல்யாண கோலம் புனைந்து தாலி கட்டும் வைபவம்  அன்று இரவு நடைபெறும்.இத் தாலி கட்டும் வைபவம் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி காலத்தில் இடம்பெறும் கந்தன் வள்ளி  திருமண நிகழ்வு போன்று  இங்கேயும் கோவலன் கண்ணகி திருமண நிகழ்வு சீர்வரிசையுடன் நடைபெறுவது  குறிப்பிடத்தக்கதாகும்.தாலி கட்டும் பூசை குடும்பமொன்றினால் பரம்பரையாக நடத்தப்பட்டு வருகின்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது கடந்த செவ்வாய்க்கிழமை (10-06-2025)திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று(16-06-2025) திங்கட்கிழமை வட்டுக்குத்து பூசை இடம்பெற்று செவ்வாய்க்கிழமை(17-06-2025) அதிகாலை இடம்பெறும் குருக்குளிர்த்தி பாடுதலுடன் வருடாந்த திருச்சடங்கு நிறைவுபெறவுள்ளது. பூசைகள் யாவும் பிரதம பூசகர் வீ. யமுனாகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
புதியது பழையவை