யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்று(20-07-2025) (ஞாயிற்றுக்கிழமை) இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அவர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
நேற்று முன் (ஜூலை 19) இரு தனிநபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பொலிஸ் நிலையம் வரை சென்ற நிலையில், நேற்று (20-07-2025)அது இரண்டு குழுக்களாகப் பிரிந்து வன்முறையாக வெடித்தது. இந்த மோதலின் போது, ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் மீது வன்முறைக் கும்பல் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வன்முறையில் ஈடுபட்ட இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.