இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK), வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் அத்துமீறலைக் கண்டித்து, ஆகஸ்ட் 15 அன்று முழு அடைப்புப் (ஹர்த்தால்) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், இலங்கை இராணுவத்தின் 63 ஆவது பிரிவைச் சேர்ந்த படையினரால் 32 வயதான எதிர்மனசிங்கம் கபில்ராஜ் படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கபில்ராஜ் மற்றும் மேலும் நான்கு பேர் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சில இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட தமிழரசுக் கட்சி, இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.
வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் "அளவுக்கு அதிகமான பிரசன்னத்தை" குறைக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இராணுவத்தின் தொடர்ச்சியான கொடூரங்களுக்கு எதிராக இந்த முழு அடைப்புப் போராட்டம் இரு மாகாணங்களிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.