பொது நிர்வாக அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டம் நாளையதினம் (06.08.2025) புதன்கிழமை நடைபெறவிருந்தது. இக்கூட்டத்தை ஒத்திவைக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் கரியப்பர்
விடுத்த வேண்டுகோளுக்கமைவாகஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.
குறித்த குழுக் கூட்டத்தில் கல்முனை விவகாரமும் ஆராயப்படவிருந்தது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளாத நிலையில் அது நடத்தப்படக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் கரியப்பர், கடந்த வியாழக்கிழமை துறைசார் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன், குறித்த ஆலோசனைக் குழுவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள கல்முனை உபசெயலக விவகாரம் தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்புகள் அழைக்கப்படாமல் கூட்டம் நடத்தப்படுவது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கும் நிர்வாக நியாயத்திற்கும் முரணானது எனவும் நிசாம் காரியப்பர் எம்.பி அதில் சுட்டிக்காட்டி வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைவாகவே, நாளையதினம் (06) புதன்கிழமை நடைபெறவிருந்த இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
