எதிர்க்கட்சிகளின் திடீர் கூட்டணி – “ரணிலை காட்டிக்கொண்டு தப்பிக்க முயற்சி” - பிரபு எம்பி குற்றச்சாட்டு.!

எதிர்க்கட்சிகள் திடீரென ஒன்று சேர்ந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்காக குரல் கொடுக்கின்றனவென்பது, தாங்கள் இழைத்த குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிதான் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

நேற்று (24.08.2025) பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்தபோது, கடந்த காலங்களில் ரணிலை விமர்சித்தவர்களே இன்று அவருக்காக விடுதலை கோரி ஒன்றிணைந்திருப்பது மக்கள் முன் தெளிவாக வெளிப்படுவதாக கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மொட்டு கட்சியின் செயலாளரும், ராதாகிருஷ்ணன், மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் முன்பு ரணிலை கடுமையாக விமர்சித்த போதும், இன்று அவரை “சிறந்த தலைவர்” எனப் புகழ்ந்து குரல் கொடுப்பது மிகப்பெரிய முரண்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த கூட்டணியில் உள்ள பல தரப்பினருக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன. சஜித் பிரேமதாசவை தவிர்த்து தனி கூட்டணியாக ஒன்று சேர்ந்திருப்பதன் நோக்கம், குற்றவாளிகளை காப்பாற்றுவதே என அவர் வலியுறுத்தினார்.

மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவு, ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருந்தது. அந்த வாக்குறுதியின்படி எந்த அரசியல் தலையீடும் இன்றி, சட்டம் நேர்மையாக செயல்படுகிறது எனவும் பிரபு குறிப்பிட்டார்.

“மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் இனி அனுமதிக்க மாட்டார்கள். மக்களின் நம்பிக்கையோடும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னேறிக்கொண்டிருக்கிறது” என அவர் வலியுறுத்தினார்.
புதியது பழையவை