இலங்கை நாடாளுமன்ற உணவகத்தில் காணப்படும் மோசமான சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட 40 ஆண்டுகளில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அல்லது சுகாதார அதிகாரிகள் யாரும் உணவு தயாரிக்கும் இடங்களைச் சோதனையிட அனுமதிக்கப்படவில்லை என அவர் ஒரு நிகழ்வில் பேசும்போது தெரிவித்தார்.
“ஏப்ரல் மாதம், நாடாளுமன்ற வளாகத்திற்குள் உணவுப் பாதுகாப்பு நிலைமையை ஆராயுமாறு பத்தரமுல்லை மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் நான் கோரினேன், அவர்கள் எனக்கு ஒரு அறிக்கையை வழங்கினர்,” என்று அவர் கூறினார்.
அந்த ஆய்வில், மனித பாவனைக்கு உதவாத உணவு சேர்க்கைப் பொருட்கள், எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் எச்சங்கள், உடைந்த தரைத்தளம் மற்றும் சேதமடைந்த சமையல் பாத்திரங்கள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்த அறிக்கை இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை, ஆனால் வரும் நாட்களில் அது வெளியிடப்படும் என நான் நம்புகிறேன்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விடயத்தின் தீவிரத்தை வலியுறுத்திய விக்கிரமசிங்க, ஒரு சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் ஒரு முக்கிய நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு விசமயமாகும் (food poisoning) அபாயம் குறித்து எச்சரித்தார்.
“இந்த விடயங்களில் நாங்கள் நடவடிக்கை எடுக்கும்போது, அதிகாரிகள் எம்மீது அதிருப்தி அடைகிறார்கள். சிலர் என்னை பொதுச் சுகாதார பரிசோதகர் என அழைத்தும் கேலி செய்கிறார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.