11 தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தொடர்புற்றிருப்பது தொடர்பான வழக்கை தொடர்ந்து எடுத்து செல்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது எதிர்வரும் ஜனவரி 30 ம் திகதியன்று கொழும்பு உயர்மறைமாவட்டத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான ஆட்கொணர்வு மனு விசாரணை செய்யப்படவுள்ளது.
இலங்கை சட்டத்துறை குறித்து பல்வேறு விமர்சனங்களும் எதிர்மறை கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும் சட்டம் தன் கடமைகளை நிறைவேற்றியுள்ளமைக்கு பல சான்றுகள் இருக்கின்றன எனலாம்.
அந்தவகையில், பலவழக்குகளுக்கு மும்முரமாக இருந்து செயற்பட்டு நீதியை நிலைநாட்டவும் பாடுபட்ட பல தமிழ் சட்டத்தரணிகளும் உள்ளனர்.
எனவே, இலங்கையின் முதல்தர சட்டத்தரணியாக கருதப்படும் அமரர். கௌரி சங்கரி தவராசா மற்றும் அவரது கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா மற்றும் அவர்களது இளம் சட்டத்தரணிகள் குழாம் யுத்தம் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த 2008 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற உயிர் அச்சுறுத்தல்களை துளியளவும் கணக்கெடுக்கில் எடுக்காது மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே இந்த கடத்தல் வழக்கு இவ்வளவு தூரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றால் மிகையாகாது. இவ்வழக்கின் ஊடாகவே திருகோணமலை கடற்படை தளத்தில் காணப்பட்ட நிலக்கீழ் தடுப்பு சித்திரவதை முகாம் ( கன்சைட் கம்ப் ) மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கோத்தபாய சித்திரவதை முகாம் என்பன கண்டுபிடிக்கப்பட்டு அங்கு நடைபெற்ற சித்திரவதைகள் ,கொலைகள் தொடர்பான தகவல்கள் சர்வதேசத்திற்கு தெரியவந்தன. இவற்றை விசாரணை செய்து கண்டுபிடிப்பதில் சிஐடி இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வாவும் பெரும்பங்காற்றியிருந்தார்.
2019 டிசம்பரில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அடுத்த தினம் இன்ஸ்பெக்டர் நிசாந்த சில்வா சுவிஸ் நாட்டுக்கு தப்பிச்சென்று அடைக்கலம் கோரியிருந்தார்.
அதேநேரம் இதே வழக்கில் மைத்திரிபால சிறிசேன காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா தொடர்ச்சியாக மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட சிக்கலுக்கு உள்ளாகியிருந்தார்.
இவ்வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி. தவராசா தலைமையிலான குழு தனியே நீதிமன்றத்தில் வழக்கினை முன்னெடுத்தவேளையில் முன்னாள் கடற்படை தளபதியை காப்பாற்றுவதற்காக நான்கு ஜனாதிபதி சட்டத்தரணி உட்பட 75 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
தொடர்ச்சியாக மூன்று தடவைகள் நீதிமன்றங்களுக்கு சமூகமளிக்காதமையால் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் வசந்த கரன்னகொடவுக்காக சட்டத்தரணி நிரான் அங்கற்றல் என்பவர் தலைமையிலான குழு நீதிமன்றத்தில் வாதாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
இந்த சட்டத்தரணி நிரான் அங்கற்றல் 2017 ல் ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மாநாட்டுக்கு சென்ற தமிழரசு கட்சியின் சட்டவிவகார குழுவில் இடம்பிடித்திருந்தார்.