இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அதிகாரத்திற்குட்பட்ட மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிப்புக்கான அமர்வு நேற்று (22.12.2025)ஆம் திகதி பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் இடம் பெற்றது.
இன்றைய சபை அமர்வின் போது நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு மௌன நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
சபைச் சம்பிரதாயங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அமர்வின்போது தவிசாளரினால் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் தலைமையில் மாதாந்த கூட்டம் சபா மண்டபத்தில் நடைபெற்ற போதே 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு அறிக்கை சமர்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குறித்த பாதீடு தொடர்பிலான உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இடமளிக்கப்பட்டு பாதீடு நிறைவேற்றம் தொடர்பில் தவிசாளரினால் வாக்கெடுப்பிற்காக அறிவிக்கப்பட்டது.
இன்றைய பாதீட்டின் போது உப தவிசாளர் த.கயசீலன்,சபை உறுப்பினர்கள்,சபையின் செயலாளர் எஸ்.பகீரதன் முன்னிலையில் வாக்களிப்பு இடம் பெற்றன.
வாக்களிப்பின் போது தமிழரசுக்கட்சியின் எட்டு உறுப்பினர்கள் ஆதரவாகவும்,
தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நடுநிலையாகவும்,கிழக்குதமிழர் கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன் அடிப்படையில் பிரதேசசபையின் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் தவிசாளருக்கான மேலதிக வாக்குகளுடன் தமிழரசுக்கட்சியானது 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு வெற்றிபெற்றுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு சபைக்கு வருகை தந்த மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ் மற்றும் கட்சியின் முன்னால் பிரதேசசபை உறுப்பினர் வருகைதந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.