மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்கு நீதிகோரி– மட்டக்களப்பில் நினைவேந்தல்!

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (25.12.2025)ஆம் திகதி பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில், இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் க.
சோபனன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மதத் தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், இ. சிறிநாத் உள்ளிட்டோர், கட்சியின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் தொடர்பான விசாரணைகளை மீள வலியுறுத்தி, நீதியை கோரும் முகமாக மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து மட்டக்களப்பு மாநகரசபை வரை பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியின் போது...

“மாமனிதர் ஜோசப் எம்.பியின் படுகொலைக்கு நீதிவேண்டும்”,
“அனுர அரசே, நீங்களும் உடந்தையா?”,
“சர்வதேசமே, 20 ஆண்டுகள் கடந்தும் நீதியில்லை”,
“கொலையாளியை கண்டுபிடிக்க 20 ஆண்டுகளா?”
எனப் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலம் மாநகரசபை மண்டபம் வரை முன்னெடுக்கப்பட்டது.

பேரணியைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உருவப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் மற்றும் வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் க. சோபனன் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார் உட்பட கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் விசேடமாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அ. சர்வேஸ்வரன், “இலங்கை வரலாற்றுப் பின்னணியில் சமஸ்டித் தீர்வினைப் பெறல்” என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார். இதில், சமஸ்டித் தீர்வு தொடர்பில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் மேற்கொண்ட முனைப்புகள் குறித்து அவர் விளக்கினார்.நினைவுப் பேருரையைத் தொடர்ந்து, பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் அவர்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை