இரண்டு ஹீரோக்களும் இனி எம் நினைவில் மட்டுமே!

அச்செழு அங்கிள் என்று 19 வயதில் கூப்பிட்டேன்,வா தம்பி  வா தம்பி என்று அழைத்து  அன்ரியை கூப்பிட்டு எங்கடை பிள்ளைகள் வந்திருக்கிறார்கள் என்று அறிமுகப்படுத்தினார். இவர் தான் ராஜன் எங்கடை  பொறுப்பாளர் என்றும் சொன்னார். முதலில் சாப்பிடுங்கள்.சாப்பிட்ட பின்பு கதைப்போம் என்று  உபசரித்த அந்த நாள் தான்  அங்கிளுடனான முதல் நாள்.


இந்த காலம் என்பது  யாழில்  சிஐடி. பொலிஸ் , காட்டிக்கொடுப்போர் உலா வந்த காலம். நாங்கள் உயிரைகொடுத்து போராடுவதற்கு புறப்பட்டவர்கள் .அங்கிளோ , குடும்பமோ அப்படி இல்லை  இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் இப்படியான ஓர் அங்கிளை சந்தித்து அதுவும் சாப்பாடு தந்து ஆதரவளித்தது என்பது அன்றைய காலகட்டத்தில் ஒரு பெரியவிடயம்.


பகல் முழுவதும் எனக்கு தியாகி தீலிபனாலும், தளபதி கிட்டண்ணாவாலும் தரப்பட்ட ஊர்களில் கடமையை முடித்துவிட்டு  இரவு அவர்கள் தங்கும் முகாமுக்குச்  சென்று  அடுத்த நாள் காலை இருவருக்கும் என்ன வேலை செய்தேன் என்று சொல்லவேண்டும். அங்கிள் வீட்டு சந்திப்பை விபரித்தேன். அவர்கள் நான் ஒரு நாட்டுப்பற்றாளரை  கண்டுபிடித்துவிட்டேன் என்று  சந்தோசப்பட்டார்கள்.

இங்கே நான் குறிப்பிட்ட நாட்டுப்பற்றாளர் என்ற சொல் அன்று வழக்கத்தில் இல்லை.  நாங்கள் ஆதரவாளர் அல்லது சோஸ் வீடு என்ற சொல்லையே பாவித்தோம்.இந்த சொல் 1990 களிற்கு பின் எங்கள் அமைப்புடன் சேர்ந்து தமிழ் தேசத்திற்காவும், தமிழ்மொழிக்காகவும், கலை, இலக்கியம், பல்வேறுதுறைகளின் வளரச்சிக்காகவும் உழைத்தவர்கள் மரணித்தபோது “ நாட்டுப்பற்றாளர்” என்று தேசியத்தலைவரால் வழங்கப்பட்ட கெளரவம்.

அங்கிளின் குடும்பம்  குடும்பத் தலைவனை இழந்து தவிக்கிறது. நாடு தலைவரை இழந்து தவிக்கிறது நாங்கள் தலைவர் வாயால் அங்கிளுக்கு நாட்டுப்பற்றாளர் கெளவரம் கிடைக்கவில்லை என்று இழப்புடன் கூடியகவலையால் தவிக்கின்றோம்.

அங்கிள் என்றும் பிரபாவின் அப்பா என்றுமே ஆரம்பத்தில் அழைத்தோம் 1987 இல் பிரபா (இரண்டு பெண் பிள்ளகள் )ஒரே ஒரு மகன்  திரு. பிரபாகரன் இயக்கத்தில் சேரந்து ஹீரோ ராஜ் ஆகின்றார். ஆனால் அங்கிளுடன் பழகிய எங்களைப்பொறுத்தவரை அவரும் ஒரு ஹீரோவாகத்தான் எல்லா இடங்களலும் செயற்பட்டார்.

இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த வேளை ஹீரோ ராஜ் 50 கலிபர் துப்பாக்கியுடன் யாழ்கோட்டை காவலரணில் நின்று சியாமாசெட்டி விமானம் ஒன்றை சுட்டு பண்ணைக்கடலில் வீழ்த்தி அன்று கோட்டையின் நாயகனாக இருந்தார்.

இந்த காலகட்டத்தில் அப்பாவும் மகனும் ஹீரோக்களாக எல்லோர் கண்களிலும் தெரிந்தார்கள்.

அங்கிள் கதைக்கும்போது தான் 1981 இல் யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்வேளை  வேலை விடயமாக அலுவலக ஜீப் வண்டியில் பயணம் செய்த வேளை உரும்பிராய்க்கும் பரமேஸ்வரா சந்திக்கும் இடையில்  அன்றைய இளைஞர்கள் அணியின் துப்பாக்கி சூட்டிற்கு உள்ளாகியதாகவும் நல்ல வேளை ஒர் இருசூட்டுடன் நின்றுவிட்டதாகவும் தங்கள் சாரதி ஜீப்பை நிற்பாட்டாது இழுத்து ஓடி தப்பியதாகவும். கடவுள் தன்னை உங்களை எல்லாம் ( தலைவர், போராளிகள் ) காணவேண்டும் என்று தான் தப்ப செய்தவர் என்றும் கூறுவார்.

அங்கிள் நீங்கள்  உங்கள் பிள்ளைகளை எப்படி அன்பு காட்டி வளர்த்தீர்களோ அதே அன்புடன் எங்களிற்கு  ஆதரவளித்தீர்கள் அடைக்கலம் தந்தீர்கள், உணவு தந்தீர்கள். அச்செழு வில் அமைந்த  அல்பேட் முகாமின் காவலனாகவும்  நீங்கள் மாத்திரம் நிற்காமல் ஊரையே காவல் கோட்டையாக  அக்காச்சியுடன் இணைந்து  மாற்றினீர்கள், அங்கிள் நீங்கள்  ஒரு மகனுடன்  வாழவில்லை பல நூறு மகன்களுடன் வாழ்ந்து  95 வது வயதில்  தாய் மண்ணின் நினைவுகளுடன் உங்கள் உயிர்  பிரிந்துள்ளது. தாய் மண்ணிலும் உலகப்பரப்பெங்கும் வாழும் உங்களுடன் பழகிய பிள்ளைகள்  உங்கள் நினைவுகளில் …..


15/9/1990  இளம் ஹீரோ ராஜ் வீரச்சாவு.  என்னால் அச்செழு அங்கிள் என்றும் , பிரபாவின் அப்பா எனவும் ஹீரோ ராஜ் அப்பா என்றும், லண்டன் வந்து சண் மாஸ்ரர் என்றும் சண் அங்கிள் என்றும், கிழவன் என்றும் அழைக்கப்பட்டார் எப்போ தொலைபேசியில் கதைத்தாலும் எப்போ வருவாய் வீட்டிற்கு என்று தான் கேட்பார். 20/12/25( இயற்கை எய்தினார)இரண்டு ஹீரோக்களும் இனி எல்லோர் நினைவுகளில்….


என்றும் உங்கள் நினைவுகளுடன். இ. ராஜன்

புதியது பழையவை