மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பாலக்காட்டுவெட்டையில் அறுவடைக்கு தயாரான வயலை நேற்று இரவு துவம்சம் செய்த காட்டு யானைக்கூட்டம்.
வாழைச்சேனை கமநல சேவை நிலைய பிரிவிற்குட்பட்ட பாலக்காட்டுவெட்டை, மதுரங்கேணி விவசாயக்கண்டத்திலுள்ள வயல்களுக்குள் நேற்றிரவு (16.01.2026) புகுந்த காட்டு யானைக்கூட்டம் அறுவைடைக்கு தயாரான நிலையிலிருந்த வேளாண்மையை துவம்சம் செய்து நாசப்படுத்தியுள்ளது.
முஹம்மது ஜாபிர் என்பவரினால் விவசாயம் செய்யப்பட்ட குறித்த வயல் இன்னும் ஓரிரு தினங்களில் அறுவடைக்குத் தயாரான நிலையில் சுமார் ஒரு ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மையை நாசப்படுத்தியுள்ளது.
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கடன்பட்டு வேளாண்மைச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் காட்டு யானைகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ஏனைய விசவாயிகளும் தமது வேளாண்மை உற்பத்திகளைப் பாதுகாப்பதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை கமநல சேவை நிலையம் கவனத்திலெடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினூடாக காட்டு யானைகளின் அழிவுகளிலிருந்து விவசாய செய்கைகளைப்பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டயீட்டைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது வேளாண்மை அறுவடைக்குத் தயாராகி வருவதால் காட்டு யானைகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுவதுடன், இப்பிரதேசத்தில் நிரந்தரமாக குடிகொண்டுள்ள காட்டு யானைக்கூட்டமொன்று பொதுமக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது.