அதிபர் இடமாற்றத்திற்கெதிராக சபூர் வித்தியாலய முன்றலில் பாரிய போராட்டம்.!

சம்மாந்துறை சபூர் வித்தியாலய அதிபரின் திடீர் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச்செய்யக்கோரி, இன்று (09.01.2026)ஆம் திகதி  காலை பாடசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பின்னர் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்னால் பாரிய முற்றுகைப்போராட்டமாக மாற்றமடைந்தது.

குறித்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டு, வலயக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இன்று காலை சபூர் வித்தியாலயத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள், அதிபரின் இடமாற்றத்திற்கெதிராக கோஷங்களை எழுப்பினர். 

இதனைத்தொடர்ந்து, போராட்டக்குழுவினர் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு ஊர்வலமாகச்சென்று, அலுவலக நுழைவாயிலை மறித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திறமையான நிர்வாகத்துடன் பாடசாலையை கல்வி மற்றும் ஒழுக்க ரீதியாக முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்ற அதிபரை, முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்வது பாடசாலைச் சமூகத்துக்கு இழைக்கும் அநீதியாகும் என பெற்றோர்கள் விசனம் தெரிவித்தனர்.

 “கல்வி அதிகாரிகளே, எமது பாடசாலையின் வளர்ச்சியில் விளையாடாதீர்கள்”, “அதிபரின் இடமாற்றத்தை உடனே நிறுத்துங்கள்” எனும் வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு அவர்கள் நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதிக்கட்டமாக, பாடசாலைச் சமூகம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட விசேட கோரிக்கை மனு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
புதியது பழையவை