இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்து ஒரு தாழ் அமுக்க பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது.
ஆனபடியினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை மறுதினம் முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் நுவரெலியா, மாத்தளை, பொலனறுவை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு , ஹம்பகா, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளதால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
பேருவளை தொடக்கம் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை , திருகோணமலை, பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.