2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17.02.2026) ஆம் திகதி ஆரம்பமாகிறது.
நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை 2025 (2026) சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.
இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும்.
பிற்பகல் வேளை பரீட்சை 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் பகல் 12.30 மணியளவில் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பரீட்சை நிலையங்களுக்குக் கையடக்கத் தொலைபேசிகள், புளூடூத் சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது எவ்வித ஆவணங்களையும் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சை முடியும் வரை தமது ஆள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
பாடசாலை பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தேவைப்படின் இரண்டு புகைப்படங்களுடன் கிராம உத்தியோகத்தர் மூலம் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்.
வேறொரு பரீட்சார்த்திக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால் சில சமயங்களில் பரீட்சை பெறுபேறுகளை ரத்துச் செய்ய நேரிடும்.
இடைவேளை நேரத்திலும் ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்' எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.