கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று – பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (07.02.2026)ஆம் திகதி சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பாலர் பாடசாலை ஆசிரியரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த. கயசீலன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மலர் மாலை அணிவித்து வரவேற்பு
நிகழ்வின் ஆரம்பத்தில், பாடசாலையின் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து இன்முகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன், அதிதிகளினால் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
குறைபாடுகள் குறித்து கவனம்
இப் பாடசாலையில் தற்போது மின்சார வசதி இல்லாமை மற்றும் மாணவர்களின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் காணப்படுவது தொடர்பில் இதன்போது அதிதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உப தவிசாளரின் வாக்குறுதி
நிகழ்வில் உரையாற்றிய உப தவிசாளர் த. கயசீலன் அவர்கள் குறிப்பிடுகையில்:
"தற்போது மாகாண சபையினால் வழங்கப்படும் 6,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனை அதிகரிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். அத்துடன், பாடசாலையின் நீண்டகாலத் தேவையாக உள்ள மின்சார இணைப்பினை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் சமாதான நீதவான் சி.கோபாலசிங்கம், கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், ஆலய நிருவாகத்தினர், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.