ஸ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்றைய(04.02.2026) தினத்தைத் தமிழர்களின் துயர்மிகுந்த கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, மாபெரும் எழுச்சிப் பேரணியானது கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மிகக்குறிப்பாக, வடக்கு-கிழக்குத் தமிழர் தாயகத்தில் தொடரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியினை நிலைநாட்டல் போன்ற விடயங்களை வலியுறுத்தி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான பேரணி டிப்போ சந்திவரை சென்று, ஒருங்கிணைந்த சிவில் அமைப்புகளின் கரிநாள் பிரகடனத்துடன் நிறைவடைந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், வடக்கு-கிழக்குக் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், தாயகச் செயலணி - வடக்கு-கிழக்கு சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒழுங்கமைப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, பூரண கதவடைப்பு மூலம் வடக்கு-கிழக்கு வர்த்தக சமூகம் பேராதரவை வழங்கியிருந்தது.
பேரணியில் ஈடுபட்டவர்கள் "வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்", "வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்", "ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களின் கரிநாள்" போன்ற கோஷங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், முழக்கங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் எழுச்சிபூர்வமாகப் பங்கேற்றனர்.
இப்பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.