மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்!

குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி இடத்தினை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (17.03.2026) ஆம் திகதி நேரடி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கின் ஒரு கட்டமாக, இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். 

தற்போது இந்த இடம் பலத்த பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், குருக்கள்மடம் மனிதப்புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

​நீதிமன்றின் உத்தரவிற்கமைய இந்த அகழ்வாய்வு பணிகள் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய இந்த விசேட கள விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
புதியது பழையவை