விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள்.!

அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பிராக செயற்பட்ட சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று (08.04.2026)மாலை இடம்பெற்றது.

இதன்போது 43 வயது மதிக்கத்தக்க காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பிராக செயற்பட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் பயன்படுத்திய பல வீடுகளில் மணிக்கணக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலத்திரனியல் தராசு 2, கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், கொரியர் ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர் இன்று (09.04.2026) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை