அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் இன்று (08.05.2026) ஆம் திகதி மதியம் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, பெருந்தொகையான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய குறித்த சந்தேக நபரிடமிருந்து 25 கிராம் 280 மில்லி கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சி அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞர், நீண்டகாலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு இரகசியமான முறையில் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த முக்கிய நபர் என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.