தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை(08.05.2026) முதல் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு...
தற்போதைய வானிலை மாதிரிகளின் அடிப்படையில், அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கைக்கு அண்மித்த தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதன் செல்வாக்கினால், மே மாதம் 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரையான மழை பெய்யக்கூடும்.
முக்கியத்துவம் வாய்ந்த வானிலை மாற்றம்
2025/2026 வடகீழ் பருவக்காற்றுக் காலத்தின் நிறைவுக்குப் பின்னர், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் முதலாவது தாழமுக்கம் இது என்பதால், வானிலை ரீதியாக இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மக்களுக்கான அறிவுறுத்தல்கள்
அசௌகரியங்கள்
ஏற்கனவே வெப்பச்சலனம் காரணமாகப் பல பிரதேசங்களில் மழை பெய்துள்ள நிலையில், மீண்டும் கனமழை பெய்யும்போது நிலச்சரிவு அல்லது வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
எனவே, பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
எதிர்வரும் மே 09 முதல் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடல் பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றுள்ளவர்களும், கரையோர மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.