மட்டக்களப்பு வீராங்கனை தவிசாலினி ஆசிய மல்யுத்த போட்டிக்குத் தேர்வு.!

வியட்நாமில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மகளிர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் வீராங்கனை யோகேந்திரகுமார் தவிசாலினி இலங்கை தேசிய அணியில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

​அதேவேளை, இந்த தேசிய அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராகவும் மட்டக்களப்பைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் வேலு திருச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டம் இரட்டிப்புப் பெருமையைப் பெற்றுள்ளது.

​இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

​கண்டி, திகன பகுதியில் நடைபெற்ற ஆசிய மட்டத்திற்கான தகுதிப் போட்டிகளில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி ஜோசப் வாஸ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய யோகேந்திரகுமார் தவிசாலினி கலந்து கொண்டார். 

இதில் தனது அபார திறமைகளை வெளிப்படுத்திய அவர் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்தார்.

​இதன் மூலம், ஆசிய மல்யுத்த போட்டியில் 69-73 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கையின் சார்பில் போட்டியிடும் தகுதியை அவர் உறுதி செய்துள்ளார்.


​மட்டக்களப்பிற்கு கிடைத்த இரட்டிப்புப் பெருமை
​இலங்கை அணியின் வீராங்கனையாக தவிசாலினி தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, இந்த 17 வயதுக்குட்பட்ட இலங்கை மல்யுத்த அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக (Chief Coach) மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் வேலு திருச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.


​ஒரே பிரதேசத்திலிருந்து சர்வதேச மட்டத்திலான வீராங்கனையும், தேசிய அளவிலான பிரதான பயிற்றுவிப்பாளரும் உருவாகியிருப்பது மட்டக்களப்பு மண்ணிற்கும், விளையாட்டுத் துறைக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.
​வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன
​மிகக் குறுகிய காலத்திற்குள், தனது கடின உழைப்பு மற்றும் தீவிர பயிற்சியின் மூலம் சர்வதேச மேடையை எட்டியுள்ள இளம் வீராங்கனை தவிசாலினிக்கும், பயிற்றுவிப்பாளர் திருச்செல்வம் அவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் எனப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


​வியட்நாமில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் நோக்குடன் தவிசாலினி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை