மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழுள்ள வாவியில், மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கல்லடி, புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த சந்திரசேகரன் கஜேந்திரன் (44 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் கல்லடி வாவியில் மீனவர் ஒருவர் வழமை போல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அதனை இழுத்துப் பார்த்தபோது சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த மீனவர், சடலத்தைக் கரைக்குக் கொண்டு வந்து உடனடியாகக் காத்தான்குடி போலீசாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
உயிரிழந்த நபர் மதுபோதையில் வாவியில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் என போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்குத் தேவையான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காத்தான்குடி போலீசார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.