யாழ்ப்பாணத்தில் சோகம் - விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30.08.2026)ஆம் திகதி  அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின்சாரக் கசிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​இந்தத் துயரச் சம்பவத்தில் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே பலியாகியுள்ளார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

அரச அலுவலகங்களுக்கு இடையிலான உற்பத்தித்திறன் போட்டியில் பங்கேற்பதற்காக, உடுவில் பிரதேச செயலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளன. 

இதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் நடைபெறவுள்ள நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை அலுவலர்களை பணிக்கு வருமாறு வாட்ஸ்அப் (WhatsApp) குழு மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

​இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற சிந்துப்பிரியா, அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த மின்சாரக் கசிவு நீருடன் தொடர்புபட்டதால், அவர் மீது கடுமையான மின்சாரம் தாக்கியதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

​மின்சாரம் தாக்கிய அவரை சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

​விடுமுறை நாளிலும் கடமை உணர்வோடு அலுவலகப் பணிக்குச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தாய் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் சக அரச அதிகாரிகளையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

​இச்சம்பவம் குறித்து சுன்னாகம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலக வளாகத்தில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் இணைப்பே இந்த அசம்பாவிதத்திற்கு காரணமா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
புதியது பழையவை