சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பிலான மாபெரும் சர்வதேச மாநாடு இன்று (30.08.2026)ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறுகின்றது.
மாநாட்டின் தொடக்கமாக, இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பேரணியாகப் புறப்பட்ட மக்கள் தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்ததை அடுத்து, "நீதிக்கான நீள் பயணம்" சர்வதேச மாநாடு உத்தியோகபூர்வமாகத் தொடங்கியது.
இம்மாநாட்டில் சர்வதேச ராஜதந்திரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் மற்றும் மதத்தலைவர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.