மட்டக்களப்பு செட்டிபாளையம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட மாங்காடு கிராமத்தில் இன்று(06.08.2026)ஆம் திகதி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி Dr. A. உதயசூரியா அவர்களின் தலைமையிலும், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சி.யோகேஸ்வன்ரின் வழிகாட்டலிலும், செட்டிபாளையம் பொது சுகாதார பரிசோதகர் கு.குபேரன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வேலைத்திட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள், தெளி கருவி இயக்குனர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளை உறுப்பினர்கள் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அப்பகுதியில் உள்ள வீடுகள், அரச கட்டிடங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களும், நுளம்புக் குடம்பிகள் (larvae) காணப்பட்ட வளாகங்களும் இனங்காணப்பட்டன.
அத்துடன் நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்ட ஐந்து வளாகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, பராமரிப்பின்றி காணப்பட்ட ஏனைய வளவுகளின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.