டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த ஆலையடிவேம்பில் விசேட பரிசோதனை நடவடிக்கை.!

அம்பாறை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் வீடுகள் மற்றும் வீட்டுத்தோட்டங்களில் டெங்கு ஒழிப்பு விசேட பரிசோதனை இன்று (05.08.2026)ஆம் திகதி புதன்கிழமை  முன்னெடுக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆ. தர்மதாச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபை செயலாளர் எஸ். திவாகரன், உப தவிசாளர் க. ரகுபதி, பிரதேச சபை உறுப்பினர்களான பா. கதிகரன் மற்றும் பெ. சாந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அக்கரைப்பற்று 7/3 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன் அக்கரைப்பற்று 7/3 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள வீடுகள் மற்றும் வீட்டுத்தோட்டங்கள் பரிசோதிக்கப்பட்டன.

பரிசோதனையின்போது டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன், சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதியது பழையவை