கிழக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான முதற்கட்ட முகூர்த்த கால் திருப்பணி இன்று (23.08.2026) ஆம் திகதி காலை சுப வேளையில் பக்திபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகளைத் தொடர்ந்து, புதிய சித்திரத்தேர் கட்டுமானப் பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
இவ்வாலயத்தின் பாரம்பரியமிக்க பழைய சித்திரத்தேர் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதும், அதன் பாகங்கள் மற்றும் சில்லுகள் பழுதடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு புதிய தேர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மரபு வழியிலான இப்புதிய சித்திரத்தேர் நிர்மாணப் பணியை, கோவில்போரதீவை சேர்ந்த லண்டன் தொழிலதிபர்களான மார்க்கண்டு நேசராசா, மார்க்கண்டு லிங்கராசா மற்றும் அவர்களின் குடும்ப உறவினர்கள் இணைந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபயமாக ஏற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச சபைத் தவிசாளர் கிரேஷ்குமார், போரதீவு பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினர் ம.கோபிநாத் ,ஆலய நிர்வாக சபையினர், திருப்பணிக்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப் பெற்றனர்.