மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு பிரம்படித்தீவு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது இடம்பெற்ற வெடி விபத்தில் 13 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சோகச் சம்பவம் நேற்று (11.09.2026) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரான் முருக்கன்தீவைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது, நேற்று இரவு பூஜை வழிபாடுகளுக்காகப் பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. எனினும், அது உடனடியாக வெடிக்காததால், அங்கிருந்தவர்களால் அப்புறப்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளது.
அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.