உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு - 9 பேர் விடுதலை!

​உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று (22.09.2026) ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற விசேட மூவர் அடங்கிய நீதிபதிகள் ஆயத்தால் அறிவிக்கப்பட்டது.

​இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை, 9 பிரதிவாதிகள் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

​சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 தற்கொலைக்குண்டு தாக்குதல்தாரிகளுக்குத் துணைபுரிந்தமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை உட்பட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

​கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைவர்), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய விசேட மூவர் கொண்ட நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் இன்று நண்பகல் 12.27 மணிக்கு வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

​இதன்போது பிரதிவாதிகளுக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டதுடன், உயர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் தீர்ப்பின் தமிழ் மொழியாக்கமும் வாசிக்கப்பட்டது. 

தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நடவடிக்கைகள், பிற்பகல் 1.45 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகித் தீர்ப்பு முழுமையாக அறிவிக்கப்பட்டது.
புதியது பழையவை