மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் பழுகாமம் வட்டார உறுப்பினர் சுப்பிரமணியம் விக்கினேஸ்பரன் (கயல்ராஜ்)அவர்கள் இன்று (02.09.2026) அதிகாலை திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
பழுகாமம் மகா விஷ்ணு ஆலய உற்சவ நிகழ்வின் போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் 2018 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று, போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினராக மக்களுக்காகவும் அப்பிரதேசத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றியவர்.
மேலும், பழுகாமம் மகா விஷ்ணு ஆலயத்தின் செயலாளராகப் பொறுப்பு வகித்து, தீவிர சைவத் தொண்டும் ஆற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
பழுகாமம் வட்டார மக்களின் பிரதிநிதியாக நின்று, பிரதேசத்தின் பல்வேறு பொதுநலப் பணிகளிலும் அபிவிருத்தித் திட்டங்களிலும் முன்நின்று செயலாற்றிய இவரது திடீர் மறைவு பழுகாமம் பகுதியிலும், போரதீவுப்பற்று பிரதேசசபை எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக, பழுகாமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.
சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் இன்று (02.09.2026) பிற்பகல் 4.00 மணிக்கு பழுகாமம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பழுகாமம் வட்டார பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.