கல்லோயா நீரை மட்டக்களப்புக்கும் சமமாகப் பகிர வேண்டும்! பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீர் தேவை அதிகரித்து வருகிறது மட்டக்களப்பு மாவட்டத்துடன் பூர்வீகமாக இணைந்திருந்த நிலங்களையும், நீர்வளங்களையும் பிரித்து மாவட்டத்தின் விவசாயத்திற்கு கிடைக்க வேண்டிய நீரையும் தடுத்துள்ளனர். நீண்டகாலமாக நிலவி வரும் இந்த நீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டுமானால் கல்லோயா நீரை மட்டக்களப்புக்கும் சமமாகப் பகிர்ந்து தர வேண்டும். இதற்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற அதிபரும் தமிழ் தேசிய செயற்பாட்டாளருமான தங்கராஜா  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“மனதில் எழும் வேதனைகளை மற்றவர்கள் மனம் நோகாமல் எப்படி எழுதுவது என்பதுதான் தெரியவில்லை. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நீர் பிரச்சினையை பார்க்கும் போது காவிரி – கர்நாடகா நீர்ச்சண்டைதான் கண்முன்னே வருகிறது.

மட்டக்களப்பு மாவட்டம் பல நூற்றாண்டுகளாக நாம் வாழ்ந்து வரும் பூர்வீக பூமி. குடியிருப்புக்கென வேறாகவும், நீர் தேவைகளுக்கென வேறாகவும், அந்த நீரை தரும் மழைக்காடுகள் வேறாகவும் என தனி தனியாக ஒதுக்கீடு செய்து வாழ்ந்து வந்தோம்.

ஆனால் மட்டக்களப்பின் மேற்கேயுள்ள மழைக்காடுகள் எமது சம்மதமின்றி அழிக்கப்பட்டன. அங்கிருந்து ஓடிவந்து எங்கள் வயல்களுக்கு நீரைத் தந்த பட்டிப்பளை என்னும் பைந்தமிழ் ஆற்றை மறித்து குளத்தைக் கட்டி, அதற்கு இங்கினியாகலை எனப் பெயர் வைத்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான பட்டிப்பளை பிரதேசங்களுக்கு கல்லோயா எனப் பெயரை மாற்றி வைத்தார்கள்.

பின்பு, காட்டை அழித்தார்கள்,காட்டை அழித்த இடத்தில் கேகாலை மக்களைக் கொண்டு வந்து குடியேற்றினார்கள்.
குளத்தில் தேக்கிய நீரில் 95 வீதமான நீரை குடியேற்றவாசிகள் மூன்று போகமும் செய்வதற்கு வழங்குகிறார்கள். 
இது மட்டக்களப்பில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமான அம்பாறை மாவட்டத்திற்கு அந்த நீர்வளம் செல்கிறது.

 அதேவேளை, எஞ்சிய மட்டக்களப்பு மாவட்டம் மானாவாரி விவசாயத்தை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

நமது ஊருக்குள்ளே வந்து, நமது ஊருக்குள் ஓடிய ஆற்றை மறித்து குளத்தைக் கட்டி, குளத்து நீரை அவர்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். நமது வயல் நிலங்கள் மானாவாரியாகிப்போயின.

இன் நிலையில் 
சரி, காட்டை அழித்தாய். களனிகளைப் பறித்தாய். குடிப்பதற்காகவாவது கொஞ்சம் நீர் தாங்க என அப்போது இருந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கேட்கவில்லை.

ஆனால் அன்று ஒரே நாடு. ஒரே மாகாணமாக இருந்த இங்கினியாகலை குளத்து நீரை இரண்டு மாவட்டங்களுக்கும் சமமாகப் பங்கீடு செய்திருக்க வேண்டும்.  இதனை அன்று இருந்த, தற்போது இருக்கின்ற எந்த நாடாளுமன்ற உறுப்பினராவது இதுவரை கேட்டதுண்டா?

இந்தியாவில் உள்ள காவிரி நீரைப் தமிழ் நாட்டிற்கு பங்கீடு செய்வதுபோன்று அம்பாறையில் உள்ள கல்லோயா நீரையும் பங்கீடு செய்ய வேண்டும். அது எங்கள் ஊர் நீர் , எங்கள் மாவட்டத்தின் நீர் வளம் அதனை கேட்டுப் பெற வேண்டியது எங்கள் உரிமை.

இந்த உரிமைக்காக எமது சிவில் சமூக பிரதிநிதிகள் குரல் எழுப்ப வேண்டும். எமது அரசியல் பிரதிநிதிகளும் இதற்கான கோரிக்கையை வலுவாக முன்வைக்க வேண்டும்.

இல்லை என்றால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் விவசாயம், குடிநீர்,விலங்குகளுக்கானகுடி நீர் என அனைத்து தேவைகளுக்குமான நீரை பெற முடியாது நீர் இன்றி தவிக்கும் காட்சிகளை நாம் காண நேரிடலாம் என தெரிவித்தார்.
புதியது பழையவை