மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் "உள்ளூராட்சி வாரம்" ஆரம்பம்.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "உள்ளூராட்சி வாரம் - 2026"  முதலாம் நாள் நிகழ்வாக, சிறப்பு நடமாடும் சேவையும் வருமானமீட்டும் நாளும் நேற்று (14.09.2026) திங்கட்கிழமை காலை கோவில்போரதீவில் வெற்றிகரமாகத் தொடங்கியது.

​போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் கோவில்போரதீவு ஸ்ரீ கண்ணகி அன்னதான மடத்தில் காலை 9:00 மணியளவில் இந்நிகழ்வு ஆரம்பமானது.

​பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காகப் பிரதேச சபை அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்வதில் உள்ள சிரமங்களைக் குறைத்து, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கோரிக்கைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகளையும் சேவைகளையும் வழங்குவதே இச்சேவையின் முக்கிய நோக்கமாகும்.

​நடமாடும் சேவையில் வழங்கப்பட்ட முதன்மைச் சேவைகள்.

​வியாபார உத்தரவுப் பத்திரங்கள் (Licence) உடனுக்குடன் விநியோகித்தல்.

​புதிய கட்டிடப் பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்குதல்.

​தெரு மின்விளக்குகள் பராமரிப்பு மற்றும் புதிய விளக்குகள் அமைத்தல் தொடர்பான கோரிக்கைகளைப் பதிவு செய்தல்.

​திண்மக்கழிவு முகாமைத்துவம் (குப்பை அகற்றுதல்) சார்ந்த புகார்களுக்குத் தீர்வு காணல்.

​பொதுமக்களின் ஏனைய நிலுவைச் சிக்கல்கள் மற்றும் சேவைகளுக்கான உடனடி நடவடிக்கைகள்.

​இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா, கோவில்போரதீவு வட்டார உறுப்பினர் ம.கோபிநாத், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை உறுப்பினர்  சு.இளமாறன், பிரதேச சபையின் வட்டார உறுப்பினர்கள், வருமான உத்தியோகஸ்தர்கள், பொறுப்பான துறைசார் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

​இச்சிறப்பு நடமாடும் சேவையில் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் வருகை தந்து தங்களின் பல்வேறு தேவைகளுக்கான சேவைகளையும் தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்று பயனடைந்தனர்.
புதியது பழையவை