சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் குறித்துத் தவறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறி, சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் அனோஜனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் அனோஜனுக்கு முதற்கட்டமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நேற்று (17.9.2026) வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனோஜனுக்கான தண்டனையைக் குறைப்பதற்கு இலங்கை அரசுத் தரப்பில் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த பின்னணியில், திடீரென வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்குக் கோரிக்கை:
இத்தகவலை உறுதிப்படுத்தி முகநூலில் பதிவிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த், அனோஜனை மீட்பதற்கான அடுத்தகட்ட சட்டரீதியான முயற்சிகளுக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தை மையமாகக் கொண்டு இன, மத ரீதியிலான தூண்டுதல் கருத்துக்களை பரப்புவதைத் தவிர்க்குமாறும், அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.