கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின், மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் இன்று (29.09.2026) ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து தமது சொந்த ஊரான இறக்கக்கண்டி பகுதி நோக்கிப் பயணித்த காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
இவ்விபத்தில் இறக்கக்கண்டி, 4ஆம் வட்டாரம், வாளையூற்றுப் பகுதியைச் சேர்ந்த என். நிஜாம் (29)வயது என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், உயிரிழந்தவரின் மனைவியான ஆர். ரொஜானா (25)வயது அவரது 5 வயது மகனான உமர் ஹபீப் மற்றும் சகோதரரான ஆர். சஹி (19) வயது ஆகிய மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.