முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று (24.09.2026) ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பனிக்கன்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள், தந்தை மற்றும் தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்.
இதன்போது, ஆபத்தை உணர்ந்த மகள் சத்தமிட்டுக் கூச்சலிட்டுள்ளார்.
மகளின் கூச்சலைக் கேட்டு விரைந்து வந்த அயலவர்கள், படுகாயமடைந்த தம்பதியினரை மீட்டு உடனடியாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இக்கொலைச் சம்பவத்தை மேற்கண்ட நபர்கள் யார், எதற்காக இக்கொடூரச் செயலில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கண்டுவருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.