அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22.09.2026) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்ற 26 வயதுடைய திருமணமான மாணவி உயிரிழந்துள்ளார்.
நிந்தவூர் 9ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, இறுதியாண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளின் பின்புற ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை எதிர்பாராதவிதமாக பின்சக்கரத்தில் சிக்கியதால், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதுடன், அவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பாரிய காயத்தினால் ஏற்பட்ட தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.