கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் புனருத்தாரண யந்திர பிரதிஷ்டா ஏககுண்டபட்ச மஹாயாகப் பெருஞ்சாந்தி குடமுழுக்கு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆலயப் புனருத்தாரணப் பணிகளின் நிறைவாக, ஆகம முறைப்படி பல்வேறு விசேட கிரியைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, செப்டம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு மேல் காரியசித்தி கணபதி ஆராதனை, குலதெய்வ விஸ்வகர்மா ஆராதனை மற்றும் கணபதி ஹோமம் ஆகிய கிரியைகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு பத்திரகாளி அம்மனின் பிரதான கலசம் தாங்கிய கஜ ஊர்வலம், குட்டிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வழக்கமான வீதியினூடாக ஆலயத்தை வந்தடையவுள்ளது.
தொடர்ந்து, செப்டம்பர் 12ஆம் திகதி அதிகாலை 3.30 மணிக்கு பிரம்ம முகூர்த்த வேளையில் தூபிக்கலசம் நிர்ணயித்தல், அம்மனுக்கான யந்திர பிரதிஷ்டை, அம்மன் பிரதிஷ்டை, அடையல் பிரதிஷ்டை மற்றும் பரிவார தெய்வங்களுக்கான யந்திரப் பிரதிஷ்டை உள்ளிட்ட விசேட கிரியைகள் இடம்பெறவுள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வாக 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் விசேட யாகபூஜைகள் இடம்பெற்று, முற்பகல் 10.45 மணிக்கு சுபமுகூர்த்த வேளையில் மகா குடமுழுக்கும், அதனைத் தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கான நன்னீராட்டுதலும், அம்மனுக்கான சுமங்கலி பட்டாம்பிகை திருக்கோல அலங்கார தரிசனமும் நடைபெறவுள்ளன.
இக்கிரியைகளை பிரதிஷ்டா பிரதம குருமணி விஷ்வபிரம்மஸ்ரீ சற்குணராசா குருக்கள் (உதயன் ஐயா) தலைமையில், உதவி குரு சிவஸ்ரீ கனியவன் ஐயா மற்றும் சிவாச்சாரியார்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
ஆலய நிர்வாகத்தினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்களின் ஏற்பாட்டில் விழாவிற்கான ஆயத்தங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடமுழுக்கு பெருவிழாவைத் தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 12 நாட்களுக்கு விசேட மண்டலாபிஷேகப் பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அம்மனின் அருளாசியைப் பெறுமாறு ஆலய நிருவாக சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.