வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள வளிமண்டல ஏது நிலைகள் காரணமாக, இம்முறை இரண்டாம் இடைப்பருவம் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தில் அதிகளவிலான தாழமுக்கங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வானிலை முன்னறிவிப்புகள்
முதல் தாழமுக்கம் எதிர்வரும் (13.10.2026)ஆம் திகதி அன்று அந்தமான் தீவுகளுக்கு அருகாக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகி, மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் (09.10.2026)ஆம் திகதி காற்றின் திசை மாறி கீழைக் காற்று வீசத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, இவற்றுக்கான வடகீழ்ப் பருவக்காற்று காலம் வரும் (15.10.2026)ஆம் திகதி அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
இம்முறை பருவமழைக் காலத்தில் சுமார் 07 தாழமுக்க நிகழ்வுகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது காலநிலை மாற்றத்தின் தாக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் வெப்பச் சலன மழை வருகின்ற 12 ஆம் திகதி வரை நீடிக்கும்.,
அதன் பின்னர் அவை விலகிக் கொள்ளும்.
மாகாண வாரியான மழைவீழ்ச்சி மற்றும் எச்சரிக்கைகள்
அக்டோபர் 15 முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, சப்ரகமுவா மற்றும் தெற்கு மாகாணங்களில் பரவலான மழை பெய்யும்.
மத்திய, வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அக்டோபர் 15 முதல் 21 வரை மலையகப் பகுதிகளில் கனமழையுடன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஒக்டோபர் இறுதிப் பகுதி முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை வெள்ள அனர்த்தங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
விவசாயிகளுக்கான விசேட அறிவுறுத்தல்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த விவசாயிகள், எதிர்வரும் அக்டோபர் 15 முதல் பருவமழை தொடங்கி தாழமுக்கங்களோடு கனமழை செறிவடையத் தொடங்கும் என்பதால், அதற்கு ஏற்ப தங்களது பெரும்போக விதைப்புச் செயற்பாடுகளைத் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலையக மற்றும் தாழ்நிலப் பகுதி மக்கள், கடந்த காலங்களை விட இம்முறை முன்கூட்டியே அவதானமாகவும் பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராகவும் இருப்பதன் மூலம் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள முடியும்.