உலக உளநல தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/மண்டூர் 37 நவகிரி வித்தியாலயத்தில் மாணவர்களிடையே உளநலம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (12.10.2026)ஆம் திகதி இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திரு. யோகநாதன் மற்றும் பிரதி அதிபர் திரு. செ. சிதம்பரநாதன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் ஆலோசனை வழிகாட்டலுக்கு பொறுப்பான ஆசிரியர் திரு. இ. தீபராசா இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்.
இந்நிகழ்வின் ஊடாக உளநலத்தின் முக்கியத்துவம் குறித்து ஆழமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், மாணவர்களின் உளவியல் சார்ந்த எண்ணங்களும் கலை மற்றும் எழுத்து வடிவில் வண்ண வார்த்தைகளாகவும் வெளிப்படுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்குபற்றித் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், உலக உளநல தின நிகழ்வினை வெற்றிகரமாகத் திட்டமிட்டுச் செயற்படுத்தியமைக்காக ஆலோசனை வழிகாட்டல் பொறுப்பாசிரியர் திரு. இ. தீபராசா அவர்கள் பாடசாலை அதிபரால் இதன்போது விசேடமாகப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
மாணவர்களின் மனநலப் பாதுகாப்பையும் ஆரோக்கியமான கல்விச் சூழலையும் மேம்படுத்தும் நோக்கில் பாடசாலையால் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சி அப்பகுதி கல்விச் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.