மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு (Renal Care Unit) இன்று (02.10.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜயசிங்க அவர்கள் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இச்சிறுநீரகப் பராமரிப்பு பிரிவின் ஊடாக, சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு சேவைகளை மேலும் மேம்படுத்தி வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சை வசதிகள் மற்றும் தனியான கட்டிட வசதி போதியளவில் இல்லாத காரணத்தால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடம் இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.