கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்கு மகா சக்திப் பெருவிழாவின் இறுதி நாள் தீமிதிப்பு நிகழ்வு இன்று (21.10.2026) புதன்கிழமை காலை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
பக்தர்களால் இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் எனப் போற்றப்படும் இவ்வாலயத்தின் வருடாந்த மகா சக்திப் பெருவிழா, கடந்த 10.10.2026ஆம் திகதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அன்றைய தினம் இரவு திருக்கதவு திறத்தல் மற்றும் அம்மன் எழுந்தருளல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஆலயப் பரிவார மூர்த்திகளுக்கும் விசேட பூசை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்றுவந்த திருவிழாவில் தினமும் பல்வேறு விசேட பூசைகள் மற்றும் பாரம்பரியச் சடங்குகள் இடம்பெற்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (20.10.2026)ஆம் திகதி சக்தி மகா யாகம் உள்ளிட்ட சமய நிகழ்வுகள் நடைபெற்றதுடன், நோர்ப்பு நெல் குத்துதல், நோர்ப்புக் கட்டுதல், ஊர்காவல், மதுக்கொடுத்தல், பலிபூசை மற்றும் தீமூட்டுதல் போன்ற பாரம்பரியச் சடங்குகளும் இடம்பெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதிப்பு இன்று(21.10.2026)ஆம் திகதி காலை 7.00 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது தேவாதிகளும் பக்தர்களும் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
பெரியபோரதீவு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பக்தர்களுடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.
பக்தி உணர்வும் ஆன்மீக எழுச்சியும் நிறைந்த இந்நிகழ்வு, ஆலயத்தின் பாரம்பரிய சமய மரபுகளையும் பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற கொடியிறக்க நிகழ்வுடன் வருடாந்த திருச்சடங்கு மகா சக்திப் பெருவிழா நிறைவுபெற்றது.
வரலாற்று மற்றும் ஆன்மீகச் சிறப்புமிக்க இத்திருவிழாவைச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினரும் தொண்டர்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கிழக்கிலங்கையின் முக்கிய சக்தித் தலங்களில் ஒன்றாக விளங்கும் பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி எழுச்சியோடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.