செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகள், புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழியில் 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 583 மனித எலும்பு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், உரிய ஆய்வுகள், மரபணுப் பரிசோதனைகள் மற்றும் தொல்லியல் தடயவியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான முக்கிய விடயங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
எனவே, குறித்த அறிக்கையைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்த அவர்கள், செம்மணி மனிதப் புதைகுழி இனப்படுகொலை தொடர்பான முக்கிய சாட்சியமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.
மேலும், கடந்த காலங்களில் கொக்குத்தொடுவாய் மற்றும் சதோச மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளிலும் உரிய நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அவர்கள், இவ்வாறான விவகாரங்களில் சர்வதேசத் தலையீடு அவசியம் என வலியுறுத்தினர்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் உரிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, மரபணுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து பெறப்படும் மரபணு மாதிரிகள் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நவம்பர் 16ஆம் திகதி போராட்டம்.
இந்தக் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையின் ஊடாகவே தமக்கான நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.
இனப்படுகொலை தொடர்பான முக்கிய சாட்சியமாகக் கருதப்படும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
சர்வதேச நீதி கிடைக்கும் வரை செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தமது போராட்டங்கள் தொடரும் எனவும் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.