மன்னார்–தலைமன்னார் பிரதான வீதியில் இராணுவ வாகனம் விபத்து.!


மன்னார்–தலைமன்னார் பிரதான வீதியின் கிளியன் குடியிருப்பு சந்திக்கு அருகில் இன்று சனிக்கிழமை (24.10.2026) மாலை இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

தலைமன்னார் வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த இராணுவத்தினருக்குச் சொந்தமான டிபென்டர் ரக வாகனம், கிளியன் குடியிருப்பு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்த 12 இராணுவ வீரர்களும் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் உடனடியாகப் பேசாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், அவர்களில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய 11 இராணுவ வீரர்களும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர், உயிரிழந்த மற்றும் காயமடைந்த இராணுவ வீரர்கள் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், விபத்துக்கான காரணம் தொடர்பிலும் மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதியது பழையவை