மட்டக்களப்பில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் - தீவிரமாகும் விசாரணை..!

நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு கிரான்குளம் இந்து மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சர்வேஸ்வரன் கஜேந்தினியின் சடலத்தின் எஞ்சிய பாகங்கள் நேற்று வியாழக்கிழமை (08.10.2026) ஆம் திகதி மாலை மீண்டும் புதைக்கப்பட்டன.

குறித்த பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலத்தின் எலும்புத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, பரிசோதனைக்காகப் பெறப்பட்ட எலும்புத் தொகுதி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சடலத்தின் எஞ்சிய பகுதிகள் கிரான்குளம் மயானத்திலிருந்து மீண்டும் புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சட்ட வைத்திய அதிகாரியினால் பெறப்பட்டுள்ள எலும்பு தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மரணத்துக்கான காரணம் கண்டறியப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2026.07.12ஆம் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில், காத்தான்குடி திசையிலிருந்து களுவாஞ்சிக்குடி திசையை நோக்கிப் பயணித்த  காரும், எதிர்த்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் சேர்ந்த 41 வயதான சர்வேஸ்வரன் கஜேந்தினி என்பவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த பின்னர்   வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.

இப்பெண்ணுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2026.08.07ஆந் திகதி மட்டக்களப்பு வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இப்பெண் 2026.08.11ஆந் திகதி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்துத் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு, காரின் சாரதியான கிரான்குளம் 7, கிரான்குளம் முகவரியைச் சேர்ந்த 47 வயதான வைத்தியரை அன்றைய தினமே கைது செய்தனர்.
புதியது பழையவை