மட்டக்களப்பு ஆசிரியையின் மரணத்திற்கு நீதிகோரி போராட்டம்!


மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, ஆசிரியை மதிவதனி கமலநாதனின் மரணத்திற்கு நீதி கோரியும், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘நீதிக்கான மக்களின் குரல் அமைப்பு’ ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


இதன்போது, ஆசிரியை மதிவதனி கமலநாதனின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும், உயிர்களைக் காப்பது அரசின் கடமை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளையும் பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.

கனரக வாகனங்களின் கட்டுப்பாடற்ற வேகம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாக வீதி விபத்துகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘நீதிக்கான மக்களின் குரல் அமைப்பின்’ தலைவர் தர்மலிங்கம் சுரேஸ், செயலாளர் குககுமரராஜா உள்ளிட்ட அமைப்பின் முக்கியஸ்தர்களும் பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயத்திடம் அமைப்பினால் கையளிக்கப்பட்டது.
புதியது பழையவை