அபிவிருத்திப் பணிகள் இனியும் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கப் போவதில்லை எனவும் அபிவிருத்தி என்பது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டியது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்விடயத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளுக்கு இடைத்தரகர்களாகச் செயற்பட்டு, ஒப்பந்தங்களைப் பெற்று, அவற்றின் மூலம் தனிப்பட்ட இலாபங்களை ஈட்டிக்கொண்டிருந்த அரசியல் கலாசாரம் இன்று மாற்றமடைந்துள்ளது.
இடைத்தரகர்களின் தலையீடின்றி அபிவிருத்திப் பணிகள் நேரடியாக மக்களைச் சென்றடையும் புதிய நடைமுறையை நாம் உருவாக்கி வருகின்றோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்திப் பணிகளுக்குத் தலைமை தாங்கி வருகின்றேன் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுவரையில் எந்தவொரு ஒப்பந்தக்காரர்களையும் நான் தனிப்பட்ட ரீதியில் சந்தித்ததில்லை. எந்தவொரு அபிவிருத்திப் பணியிலும் எனது பெயரோ, புகைப்படமோ காட்சிப்படுத்தப்பட்டதில்லை.
ஏனெனில், அரச நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் எந்தவொரு தனிநபரினதும் சொத்தல்ல. அவை மக்களின் உரிமை.இதுவே எமது கொள்கை.
மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதான்
இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தும்போது பல்வேறு சவால்களையும் எதிர்ப்புகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.
அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
உலக வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் எதிர்ப்புகளையும் தடைகளையும் சந்தித்திருக்கின்றார்கள்.
ஆனால், அந்த எதிர்ப்புகளுக்காக மாற்றத்தை ஒருபோதும் கைவிட முடியாது.
எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு, தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறிச் செல்வதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
கடந்த காலங்களில் முறையற்ற வழிகளில் வருமானம் ஈட்டியவர்கள் இன்று தமது வருமான வாய்ப்புகளை இழந்துவிட்டதாகக் கூறினால், அதற்கு இந்த அரசாங்கத்தைப் பொறுப்பாக்க முடியாது.
ஊழலுக்கும் மோசடிக்கும் இடமில்லாத, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் உரிமைகளும் கிடைக்கின்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது பொறுப்பு.
இன்று சிலர் தங்களது தனிப்பட்ட நலன்களைப் பாதுகாப்பதற்காக இனவாதத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதை நாம் காண்கின்றோம்.
கடந்த காலங்களில் இனவாதம் ஊழலைப் பாதுகாத்தது. இன்று ஊழலைப் பாதுகாப்பதற்காக மீண்டும் இனவாதத்தைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.
ஆனால், இத்தகைய முயற்சிகளால் மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.
எத்தகைய சதிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு, அவற்றை முறியடித்து, ஊழலற்ற, இனவாதமற்ற, சமத்துவமான, வளமான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எமது பயணம் தொடரும்.
அபிவிருத்தி என்பது அரசியல்வாதிகளின் வருமானத்திற்கான வழியல்ல. அது மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான வழி.
அந்த அடிப்படையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
இதுவே மக்கள் எதிர்பார்த்த மாற்றம். இந்த மாற்றத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.