செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசத் தடயவியல் விசாரணை அவசியம்!கனடாவிடம் சிறீதரன் எம்.பி. வலியுறுத்தல்.!

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

நேற்று (23.10.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீனமான தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சிறீதரன் எம்.பி. வலியுறுத்தினார்.

இச்சந்திப்பில் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப்., இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் வலியுறுத்தல்.!

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பூர்வீகக் காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் நீதி வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கனேடிய அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது இதுவரை 583 மனித எச்சத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி., இவ்விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்படுவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீனமான தடயவியல் விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தினார்.

பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரிக்கை
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 171 ஏக்கர் பூர்வீகக் காணிகளையும், யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் உள்ள 2,117 ஏக்கர் காணிகளையும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், தையிட்டி காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை மற்றும் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்டமை உள்ளிட்ட விடயங்களும் கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறுவதில் தொடர்ந்தும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கேள்விகளுக்குத் தீர்வு காணப்படாத நிலை தொடர்வதாகவும் சிறீதரன் எம்.பி. தலைமையிலான குழுவினர் சுட்டிக்காட்டினர்.

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாக கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், கேப்பாப்பிலவு பூர்வீகக் காணிகள் மற்றும் வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புகள் தொடர்பான விரிவான ஆவணங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கனேடிய வெளிவிவகாரத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

#canada news #srilanka news #jaffna news #Batticaloa news #porativupattu news#
புதியது பழையவை